Home > Dhanushkoti Drama page, Drama Reviews, Theater > Review of Dhanushkoti in Dinamani Tamil Newspaper

Review of Dhanushkoti in Dinamani Tamil Newspaper

கண்ணோட்டம்
தனுஷ்கோடி (நாடக விமர்சனம்)
வாசு
First Published : 29 Oct 2010 01:50:14 AM IST
நாடகத்தின் ஒரு காட்சி

கடந்த புதன்கிழமையன்று, நாரத கான சபாவின் சத்குரு ஞானானந்தா அரங்கத்தில், “ஷ்ரத்தா’ குழுவினரின் தனுஷ்கோடி நாடகம் நடத்தப்பட்டது. எழுதி, இயக்கியவர் கே. விவேக் ஷங்கர்.

1964-ம் வருடம் டிசம்பர் மாதம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் பெரும் புயலடித்து, வெள்ளம் பெருகி பாம்பன் பாலத்தில் பயணிகளோடு ரயில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட அந்த சோக நிகழ்வின் பின்னணியில் பின்னப்பட்டிருக்கிறது நாடகத்தின் கதை. தனுஷ்கோடியில் இருக்கும் ஒரு வீட்டில் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது. அந்த வீட்டில் நடக்கும் சம்பவங்கள்தான் நாடகத்தின் மையம். அந்த வீட்டின் படுக்கை அறை, ஹால், மாடிப்படி, வீட்டு வாசல், கேட் என ஒரே “செட்’ நாடகம் முழுவதும் அசத்துகிறது. இடி, மின்னல், மழை, புயல்… என மாறும் வானிலையை மட்டுமே காட்டி, கதையை நகர்த்தியிருப்பது ரசனையோடு இருக்கின்றது. தொடர் மழையில் நனைந்து கொண்டிருக்கும் முற்றம்… மேடை நாடகத்திற்குப் புதுசு!


தனுஷ்கோடியில் பிரம்மச்சாரியாக வாழும் தியாகராஜன் என்கிற தியாகு ஒரு வங்கியில் கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றுபவர். வங்கியின் கம்பம் கிளையில் பணிபுரியும் மாதவன் பணமுடை காரணமாக பணத்தைக் கையாடல் செய்துவிடுகிறான். இதைக் கண்டுபிடித்துவிடும் தியாகு, மாதவன் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு “ரிப்போர்ட்’ தயார் செய்து, தன் சக ஊழியரை வீட்டுக்கு அழைத்து மேலாளரிடம் கொடுக்கச் சொல்லி உறையைத் தருகிறார். சக ஊழியர் விசாலம் பேய் மழையில் வீடு திரும்ப வேண்டிய பரபரப்பில் “ரிப்போர்ட்’ உறையை தியாகு வீட்டிலேயே விட்டுச்செல்கிறார். ஆஸ்துமா நோயாளியான தியாகு மழையில் நனைந்ததால் அவதிப்படுகிறார்.

அன்று இரவு கொட்டும் மழையில் மாதவன், தியாகுவின் வீட்டுக்கு வந்து, தன் தவறை மன்னிக்க வேண்டுகிறான். “ரிப்போர்ட்டை’ மேலிடத்திற்கு அனுப்ப வேண்டாமென கெஞ்சுகிறான். நேர்மையான அதிகாரியான தியாகு மறுத்துவிடுகிறார். மழையில் வெளியே செல்ல இயலாததால், மாதவன் அவர் வீட்டிலேயே அன்று இரவு தங்க தியாகுவிடம் அனுமதி பெறுகிறான்.

தனக்கு உதவ மறுத்த தியாகுவை பழிவாங்க நினைக்கிறான் மாதவன். வங்கியின் கடைநிலை ஊழியரான விசாலத்தோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன்னைப் பற்றி தியாகு, மேலிடத்திற்கு அனுப்பவேண்டிய “ரிப்போர்ட்டும்’ தியாகுவின் வீட்டிலேயே இருப்பதைத் தெரிந்து கொள்கிறான். ஆஸ்துமா நோயாளியான தியாகுவைத் துன்புறுத்தி படுக்கையறையில் கட்டிப்போடுகிறான். தியாகுவிடம் தற்காப்புக்காக இருந்த கைத்துப்பாக்கியையும் பறித்து, ரிப்போர்ட்டைத் தேடஆரம்பிக்கிறான்.

இதன் நடுவில், வேணு- சாரதா இளைய ஜோடி, வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார்கள். மழையின் காரணமாக தியாகுவின் வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள்.

சாரதாவின் புத்திசாலித்தனத்தால், மாதவன் தியாகுவைத் தீர்த்துக்கட்டுவதற்குப் போடும் திட்டம் இளஞ்ஜோடிக்குப் புரிகிறது. தியாகுவை கொல்வதற்குத் திட்டமிடும் மாதவன் ஒருபுறம், மாதவனை போலீஸில் மாட்டிவிடப் போராடும் சாம்பு(தியாகுவின் பக்கத்து வீட்டுக்காரர்) -வேணு-சாரதாவின் கூட்டணி முயற்சிகள் இன்னொருபுறமும்… என அதேவீட்டில் கதை மேலும் நகர்கிறது. முடிவில் வேணு-சாரதா போடும் திட்டத்தால் தப்பித்து மருத்துவமனைக்குச் செல்கிறார் தியாகு. “ரிப்போர்ட்டைக் கண்டுபிடித்து மாதவன் அதைக் கிழித்துப் போட்டாலும், இயற்கையின் சீற்றமே மாதவனை தண்டிக்கிறது…’ என்பதை வீட்டினுள் புகும் வெள்ளம் புரியவைக்கிறது!

நாடகத்தின் கடைசிக் காட்சியில் வீட்டினுள் புகும் பெருவெள்ளம், அதற்கு முன்பாக அடிக்கும் புயல் காற்றில் வாசலில் அசைந்தாடும் மரங்களும், மரக்கிளைகளும் நாடகத்தைப் பார்ப்பதற்கு வந்திருந்த அதே துறையைச் சேர்ந்த பல பிரபலங்களையும் “சபாஷ்’ போடவைத்தன! தொழில்நுட்பக் கலைஞர்களின் (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்- பாலசந்தர்) கைவண்ணமும் மேடைக் காட்சிகளுக்கு அரங்கமைத்த (மோகன் பாபு) கலைஞர்களின் உழைப்பும் நாடகத்துக்கு உயிரூட்டின. பின்னணி இசையும் நாடகத்தின் வெற்றிக்கு பலம் சேர்ப்பதாக இருந்தது.

1964-ம் ஆண்டில் நடைபெறும் காட்சிகள் என்பதற்குச் சான்றாக வீட்டு முற்றம், லாந்தர் விளக்கு, அமெச்சூர் ரேடியோ போன்றவற்றையும், பால்காரரிடம் கொஞ்சம் பால் கொசுறு கேட்பதையும், வானொலியில் எம்.எஸ்.ஸின் “காற்றினிலே வரும் கீதம்’ பாடலும், முதலமைச்சர் பக்தவத்சலம் என்றும் குறிப்பிட்டு, அப்போது நேர்ந்த பேரழிவால் ராமேஸ்வரம் துண்டிக்கப்பட்டபோது, காஞ்சி பெரியவர் மடத்தில் மழைக்கு முன்பே சேகரித்த உணவு தானியங்களை மக்கள் பசியாற அளித்த செய்தியையும் வசனங்களில் கோர்த்து காட்சிகளை அமைத்துள்ளது நாடகத்துக்கு மெருகூட்டுகிறது. சில காட்சிகள் கொஞ்சம் அலுப்புத்தட்டுகிறார்போல் பார்ப்போர் உணரும்போது, தன் இயல்பான நகைச்சுவை நடிப்பினால் காட்சிகளை தூக்கி நிறுத்துகிறார் சாம்புவாக நாடகம் முழுவதும் வியாபித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி. அவருடைய நகைச்சுவை உரையாடல்களுக்குத் தொடர்ந்து கைதட்டல்கள் அரங்கத்தில் கிடைத்தவண்ணம் இருந்தன.

அரங்கம், நாடக ரசிகர்களால் முழுவதும் நிரம்பியிருந்தது. இது, தனுஷ்கோடி நாடகத்தை எழுதி, இயக்கிய விவேக் ஷங்கரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: